ஈஸ்டர் விசாரணைகளை முடக்கும் முயற்சிகளுக்கு கடும் கண்டனம்

2 Min Read

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எத்தகை உயரிய அந்தஸ்தில், பதவியில் அல்லது பொருளாதார பலத்துடன் இருந்தாலும் சரி, அவர்கள் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் காரணமாக முழு நாடும் பேரழிவைச் சந்தித்தது. குறிப்பாக, கிறிஸ்தவ மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். கைகளையும் கால்களையும் இழந்து, இன்னும் ஆறாத வடுக்களோடு அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், இந்தத் தாக்குதலால் முஸ்லிம் சமூகம் முழு நாட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேசம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.

அன்று ஏற்பட்ட சூழ்நிலையால் எங்களது ஆளுநர் பதவிகள், அமைச்சர் பதவிகளை எல்லாம் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டங்களைச் சந்தித்தோம். கடைகள் மூடப்பட்டன. வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அபாண்டமாக அனுபவித்தது.

தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளை முடக்குவதற்குக் கூட சிலர் முயற்சிக்கிறார்கள், அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கடந்த காலங்களில் இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு யாரெல்லாம் பொறுப்புக்கூற வேண்டுமோ, அவர்கள் கண்டறியப்பட வேண்டும். இந்தத் தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற நற்சான்றிதழை (Certificate) இந்தச் சமுதாயம் பெற வேண்டிய தேவையுள்ளது. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அந்தப் பாரிய இழிவிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபட வேண்டும்.

எனவே, அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த நேர்மையான விசாரணைகளுக்கு முஸ்லிம் சமூகம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது. குற்றவாளிகளின் பதவி, பட்டம் அல்லது அந்தஸ்தைப் பார்க்காமல், அவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, உரிய விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், முஸ்லிம் சமூகத்திற்கு விடிவும் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *