திருடர்களின் கூச்சலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

2 Min Read

கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்து, மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த திருடர் கூட்டத்தின் கூச்சல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மிகக் குறுகிய காலத்தில் நிவாரணங்களை வழங்கி வருவதாகக் கூறினார்.

வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசாங்கமும் இவ்வளவு விரைவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதில்லை என்றும், பல வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத மக்களுக்கு எமது அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விடுபட்ட ஏனைய மக்களுக்கும் நிவாரணங்களை விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதியும் அரசாங்கமும் பொய் கூறுவதாக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முகம் காட்டுவதற்காகச் சிலர் பேசி வருவதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், கடந்த காலத்தில் கொள்ளையடித்துவிட்டு சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பவர்களே இன்று தங்களைப் பார்த்துப் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் என்றார்.

மேலும், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் சுங்கத் திணைக்களத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து இலங்கைக்கு வாகனம் ஒன்றைக்கொண்டு வந்துள்ளதாக ஊடக செய்தி ஒன்றைப் பார்த்ததாகவும், இவ்வாறானவர்களே இன்று எம்மைக் குறை கூறுகிறார்கள் என்றும் சாடிய அவர், அந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மகன் யார் என்பது மிக விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து எரிபொருள் விலைக்குறைப்பு குறித்துப் பேசிய அவர், எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்ட போது, “வெறும் 20 ரூபா தானே குறைக்கப்பட்டுள்ளது” எனச் சிலர் ஏளனமாகப் பேசி வருவதாகக் குறிப்பிட்டார். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் 20 ரூபா என்பது பெரிய தொகையாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு 20 ரூபாயும், 20 சதவீதமும் மிக முக்கியமானதாகும் என்பதால் இந்த விலைக்குறைப்பை நாட்டின் சாதாரண மக்கள் வரவேற்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *