பேராதனைப் பல்கலைக்கழக சாதனை படைத்த பழைய மாணவர்களுக்கு கௌரவிப்பு

1 Min Read

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தின விழா மற்றும் பழைய மாணவர் கௌரவிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தின விழா மற்றும் பழைய மாணவர் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு,நேற்று (01) பல்கலைக்கழக வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த பெருமளவிலான பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், அதிதிகளினால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சேர் ஐவர் ஜென்னிங்ஸ் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. இம்முறை ஸ்தாபகர் தினப் பேருரையை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க அவர்கள் நிகழ்த்தினார்.

பல்வேறு தொழில் துறைகள் ஊடாக நாட்டுக்கும் உலகிற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல பழைய மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். அதற்கமைய, கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோரும் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது விசேட அம்சமாக, கடந்த வருடம் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் பல்கலைக்கழக வளாகத்திற்கு ஏற்பட்ட பாரிய சேதங்களுக்கு மத்தியிலும், மிகக் குறுகிய காலத்தில் பல்கலைக்கழகத்தை வழமைக்குக் கொண்டுவரப் பங்களிப்புச் செய்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி மீள ஆரம்பிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இதன்போது விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விசேட நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *