பொசன் பண்டிகையை முன்னிட்டு 10,000 பொலிஸார் கடமையில்

1 Min Read

பொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 10,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர், நீர்நிலைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் இடையூறுகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொசன் பண்டிகைக்காகப் பயணம் மேற்கொள்ளும் போது, முதியவர்களைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றச் செயல்களுக்கு இலக்காகக்கூடும் என்பதால், வீட்டின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாடி, சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆறுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்லும் போது எச்சரிக்கைப் பலகைகளைப் பின்பற்றுமாறும், உயிர்காக்கும் குழுவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் இதுவரை சுமார் 75 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், எனவே நீர்நிலைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். போதைப்பொருள் அல்லது மது அருந்திவிட்டு நீரில் இறங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடுவர். இதனிடையே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மாற்றங்களைச் செய்து அதிக சத்தத்தை உண்டாக்கும் வாகனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸா எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும் அதிக சத்தமிடும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் கட்டாயம் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறின்றி பயணிப்போர் மீதும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *