நாவின்னவில் திடீர் போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 13 பேர்

2 Min Read

பொதுப் போக்குவரத்துச் சேவையை பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும் மாற்றும் தேசியத் திட்டத்தின் கீழ், பேருந்து சாரதிகள்மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் பாவித்துள்ளனரா என்பதைக் கண்டறியும் நடமாடும் பரிசோதனை முகாம் நேற்று (23) மகரகம, நாவின்ன பேருந்து நிறுத்த வளாகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NTMI), இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த திடீர் சோதனையை ஒருங்கிணைத்திருந்தன.

நேற்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நாவின்ன பகுதியில் பயணித்த பஸ்களின் சாரதிகள்மற்றும் நடத்துநர்கள் என மொத்தம் 200 பேரிடம் சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

இந்த 200 பேரில் 13 பேருக்குப் போதைப்பொருள் பாவனை இருப்பது (Positive) உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி டொக்டர் ஜே.எம். லயனல் தெரிவித்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாகும்புர பல்பயன்பாட்டு போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் ஆய்வகச் சேவையானது, கடந்த 6 மாதங்களாக மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய 3 மாவட்டங்களிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜனவரி 2026 முதல் ஜூன் 12, 2026 வரை மொத்தம் 4,322 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 226 பேர் ஐஸ் (Ice), ஹெரோயின் (Heroin), கஞ்சா (Cannabis) மற்றும் பார்பிசுரேட்டுகள் (Barbiturates) போன்ற ஏதேனும் ஒன்றையோ அல்லது பல வகையான போதைப்பொருட்களையோ பயன்படுத்தியுள்ளமை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட சோதனையின் போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா, மருத்துவ அதிகாரி டாக்டர் ஜே.எம். லயனல், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் ஜி.வி. பவித்ரா, ஆய்வக உதவியாளர் ஷஷினி விக்ரமசிங்க மற்றும் மகரகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *