செம்மணி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

1 Min Read

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, செப்டெம்பர் 03ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 221 என்புக் கூடுகள் உட்பட முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டு 19 என்பு கூடுகளுடன் 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 53 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்கள் நடைபெற்று மே 09ஆம் திகதி வரையில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மீட்கப்பட்ட என்புக் கூடுகளுடன் சேர்ந்து 261 என்பு கூடுகள் மீட்கப்பட்டன

அந்நிலையில் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இம்மாதம் ஆரம்பமாகி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 22 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றுடன் தற்காலிகமாக அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் அடிப்படையில் முதலாம் , இரண்டாம் கட்டங்கள், மூன்றாம் கட்டத்தின் இதுவரையிலான 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *