தங்கள் தொழிலை மேற்கொள்வதற்குத் தேவையான முறையான திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இதுவரை அறிவிக்கப்படாமை காரணமாக, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இன்றும், நாளையும் தொடர்ந்து அதே இடத்தில் தங்கியிருந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருப்திகரமான தீர்வு கிடைக்காவிட்டால், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் 2,000 இற்கும் அதிகமான மீனவர்களை இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்போவதாகவும் அகில இலங்கை மீனவர் சங்கம் எச்சரித்துள்ளது.
இதற்கு முன்னதாக 9 நாட்கள் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் பின்னர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் 1 ½ அல்லது 2 மாதங்களுக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அச் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெனாண்டோ தெரிவித்தார்.
மேலும், அந்த வாக்குறுதிக்கமைய நாரா (NARA) நிறுவனம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதிக்குள் கடலடி மற்றும் கடற்கரை சார்ந்த களப் பரிசோதனைகளை முடித்திருந்த போதிலும், 5 மாதங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




