4 நிமிடங்களில் கோப்பி தரத்தை அறியும் அதிநவீன தொழில்நுட்பம்

1 Min Read

சீனாவின் கோப்பி உற்பத்தியில் முதன்மை வகிக்கும் புவெர் நகரில் அமைந்துள்ள புவெர் பியூட்டிஃபுல் ஸ்டார் வில்லேஜ் காபி எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் வளாகத்திற்கு இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவினர் விஜயம் செய்தனர்.

இந்த மையம் கோப்பி விவசாயிகள், வாங்குவோர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இணைக்கும் ஒரு பிரதான மையமாக (Hub) விளங்குவதோடு, இப்பிராந்தியத்தின் கோப்பி கலாசாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருகிறது.

இந்த விஜயத்தின் போது, பச்சை கோப்பி கொட்டைகளை (Green coffee beans) வெறும் 4 முதல் 5 நிமிடங்களுக்குள் பகுப்பாய்வு செய்யக்கூடிய அதிநவீன ‘விரைவு கோப்பி தரப் பரிசோதனை இயந்திரம்’ ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இயந்திரம் கோப்பி கொட்டைகளில் உள்ள புரதச் சத்து (Protein), அமினோ அமிலங்கள் (Amino acids) மற்றும் அமிலத்தன்மை (Acidity) ஆகியவற்றின் அளவை மிக விரைவாக மதிப்பிடுகிறது.

பாரம்பரிய தரப் பரிசோதனை முறைகளுக்கு எடுக்கும் நேரத்தை விட இது மிகக் குறைவானது என்பதால், உற்பத்தியாளர்கள் கொட்டைகளின் தரத்தை உடனே கண்டறிந்து சர்வதேச தரத்தை (Consistent standards) நிலைநிறுத்த முடிகிறது. இது அதிக துல்லியத்தன்மையையும், செயல்திறனையும் வழங்குகிறது என உள்ளூர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அனுபவப் பகிர்வு மையம், விவசாயிகள் வணிக நிறுவனங்களுடனும் நுகர்வோருடனும் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான ஒரு தளமாகச் செயல்படுவதால், உள்ளூர் சமூகங்களுக்கு கூடுதல் பொருளாதார வாய்ப்புகள் உருவாகின்றன.

ஒரு காலத்தில் உலகளவில் கோப்பி உற்பத்தியில் சிறந்து விளங்கிய இலங்கை, தற்போது தனது காப்பித் துறையை மீண்டும் கட்டியெழுப்ப தீவிரமாக முயன்று வரும் நிலையில், இந்த சீன விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இலங்கையின் தொழில்முனைவோரும் விவசாயிகளும் தரப் பரிசோதனை, விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும் கோப்பி சுற்றுலா (Coffee Tourism) ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம், இலங்கை கோப்பியை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, உலகளாவிய சந்தைகளை எளிதில் சென்றடைய முடியும் என தொழில்துறை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *