ஈரான்–இஸ்ரேல் இடையிலான பரஸ்பரம் தாக்குதல்களால் போர் பதற்றம் உச்சம்

4 Min Read

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் விலையும் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையிலேயே ஈரான் போர் நிறுத்தத்தின் பின்னர் முதல் முறை கடந்த ஞாயிறு (07) இரவு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக போர் நிறுத்தத்தை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியதை அடுத்தே ஈரானின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் ஓர் எச்சரிக்கை என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெய்ரூட் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய புரட்சிக் காவல் படை, இஸ்ரேல் மீண்டும் ‘ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்’ ஈடுபட்டால், அதற்கான பதிலடி ‘மிகப் பெரியதாக’ இருக்கும் என்றும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘அனைத்து’ இலக்குகளும் அதில் அடங்கக்கூடும் என்றும் எச்சரித்தது.

இதற்குப் பதிலடியாக, மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதனையடுத்து ஈரான் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதோடு யெமனில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வான் பாதுகாப்பு அமைப்பு அச்சுறுத்தல்களை இடைமறித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஜெரூசலம், டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை சூழவுள்ள பகுதியில் சைரன் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக ‘டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைஃபாவுக்கு தென்கிழக்கே உள்ள ரமத் டேவிட் விமானப்படை தளத்தைத் தாக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக இஸ்லாமிய புரட்சிக் காவல்படை கூறியது. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதேநேரம் ஈரானின் மேற்கு, மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக இஸ்ரேலிய படை குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் டெஹ்ரான், அணுச்சக்தி நிலையம் உள்ள இஸ்ஃபஹான் உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. நாட்டின் செறிவூட்டப்பட்ட யூரேனிய இருப்பில் பெரும்பகுதி இஸ்ஃபஹானில் இருப்பதாக நம்பப்படுகிறது. சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றிய வான் பகுதியை ஈரான் மூடியது.

இதில் ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தி இருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் பதில் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் உள்ள தனது கொல்ப் கழகத்தில் இருந்து டிரம்ப், நெதன்யாகுவுடன் அரை மணி நேரத்திற்கும் குறைவான காலம் தொலைபேசியில் பேசியதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது மேலும் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்படி நெதன்யாகுவிடம் டிரம்ப் கூறி இருப்பதோடு, ‘ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நல்ல முன்னேற்றத்திற்கு நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்’ என்று டிரம்ப் குறிப்பிட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் எக்சியோஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கும் வகையில், லெபனானில் தனது தாக்குதல்களை நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அதற்காக கடந்த வாரம் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கடுமையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் கண்டித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த வாரம் லெபனானில் போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்த பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல்முறை பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலே இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதற்கு தூண்டியது. இது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கை எட்டும் நிலையிலேயே இருப்பதாக டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

‘இது அந்த ஒப்பந்தத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை,’ என்று டிரம்ப் ‘பினான்ஸ் டைம்ஸ்’ இற்கு தெரிவித்தார். ‘முடிவுகளை எடுப்பது நான்தான். எல்லா முடிவுகளையும் நான்தான் எடுக்கிறேன். அவர் (நெதன்யாகு) முடிவுகளை எடுப்பதில்லை’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் லெபனான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல், ஈரானுடனான எந்தவொரு போர் நிறுத்தத்திலும் லெபனான் தனியான ஒன்றாக கையாளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.

எவ்வாறாயினும் அமெரிக்காவுடனான எந்தவொரு போர் நிறுத்தத்திலும் லெபனானும் உள்ளடக்கப்படுவதாக ஈரான் கூறிவருகிறது. தற்போது அமுலில் இருக்கும் போர் நிறுத்தத்திலும் லெபனான் இடம்பெறுவதாக அது வலியுறுத்துகிறது.

லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலுடனான போர் நிறுத்த உடன்படிக்கையில் இடம்பெறவில்லை என்பதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வரும் ஹிஸ்புல்லா போராளிகள் வடக்கு இஸ்ரேலிலும் தனது ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உடனடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. தாக்குதல் குறித்த செய்திகள் வெளியான ஒரு மணி நேரத்திற்குள், சர்வதேச அளவில் பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 3.63 வீதத்தால் உயர்வடைந்து, ஒரு பீப்பாய் 96.75 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, டபிள்யூ.டீ.ஐ. மசகு எண்ணெயின் விலையும் 3.35 வீதத்தால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 93.89 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *