மத்திய வங்கியின் ”Be Scam Proof” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

2 Min Read

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் நிதி மோசடிகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய வங்கி தேசிய வேலைத்திட்டமொன்றை நேற்று ஆரம்பித்துள்ளது.

ஏமாற்று பிரமிட் வர்த்தகம், பாரிய திட்டங்களுக்காக நிதி வைப்பை பொறுப்பேற்றல் மற்றும் அதிக இலாபம் இன்னும் பிரதிபலன்களைப் பெற்றுத் தருவதாக தெரிவித்து நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் நிதி மோசடிகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய வங்கி “Be Scam Proof “ என்ற இந்த தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நாட்டிற்குள் பரவலாக நிலவும் பல்வேறு நிதி மோசடிகளிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களது நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள மத்திய வங்கியின் தலைமையகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் தலைமையில் அதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது. மோசடிக்காரர்களின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து மீட்கும் வகையிலேயே இந்த புதிய வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கு உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். முறையற்ற நிதி நிறுவனம் மற்றும் சட்டவிரோதமான நிதி முறைமை தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குறைந்தளவு அறிவே மோசடிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நடைமுறையிலுள்ள பிரமிட் வர்த்தகம், சட்ட விரோதமாக பண வைப்பீடுகளை பொறுப்பேற்றல் மற்றும் அதிக இலாபத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்து முதலீட்டு மோசடிகளை மேற்கொள்தல் போன்ற செயற்பாடுகளால் நாட்டின் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பில் “Be Scam Proof ” தேசிய தெளிவூட்டல் திட்டம் இந்த நாட்டின் நிதி பாதுகாப்பை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமையும். நாட்டு மக்களுக்கு தெளிவூட்டுதலை தேசிய பொறுப்பாக கருதி அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி மோசடியில் அகப்படும் தரப்பினரை மீட்பதற்கு தனித்து முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு ஒரு கூட்டு முயற்சி அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *