முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை உடனடியாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு தொலைநகல் (Fax) மூலம் அறிவிக்குமாறும் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது. குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் பாரிய அழுத்தம் அல்லது இடையூறுகள் ஏற்படும் என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடும் அபாயம் காணப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் எச்சரித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சாலி தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.



