2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்சவுக்கு நிகழ்நிலை ஊடாக சாட்சியமளிப்பதற்கான அனுமதியை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்டிருந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், அதற்கு முதல் நாள் ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, காணாமற் போனவர்களின் உறவினர்களால் 2012 ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் ஆரம்பமாகின.
வழக்கு விசாரணைகளின் போது, 2017 ஆம் ஆண்டு சாட்சியாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில், கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தம்மால் யாழ்ப்பாணம் வர முடியாது என அவர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார். இந்த சூழ்நிலையில், நிகழ்நிலை ஊடாக சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் மூலமாக நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்தார். அந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உறுதிப்படுத்தும் சத்திய கடதாசியை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தப் பின்னணியில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலை ஊடாக நீதிமன்றத்தில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்வதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.



