புதிய அமைதி முன்மொழிவு ஒன்றை ஈரான் அனுப்பியதை அடுத்து ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றை நிறுத்தி வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது கடும் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்திற்குள்ளேயே டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு ‘மிகச் சிறந்த வாய்ப்பு’ ஒன்று தற்போது வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஈரான் புதிய அமைதி முன்மொழிவு ஒன்றை வழங்கியதை அடுத்து ‘ஈரான் மீது நாளை தாக்குதல் நடத்த அறிவுறுத்திய திட்டத்தை செய்யாது இருக்குமாறு’ அமெரிக்க இராணுவத்தை அறிவுறித்தியதாக கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் உடன்பாடு ஒன்று எட்டப்படாத சந்தர்ப்பத்தில் அறிவிக்கும்போது முழு அளவில் ஈரான் மீது தாக்குதல் தொடுக்க இராணுவத்தை தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் டிரம்ப் இது போன்ற தாக்குதல் திட்டம் ஒன்று தொடர்பில் முன்னதாக பொது வெளியில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான தாக்குதல் ஒன்று கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் டிரம்ப் ஆரம்பித்த போரை புதுப்பிப்பதாக அமையும்.
முடக்கப்பட்டிருக்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றை எடுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. உடன்படிக்கை ஒன்று எட்டப்படாத பட்சத்தில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் இதற்கு முன்னரும் கடும் எச்சரிக்கையை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்கள் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும்படி கோரியதாக குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால், ‘அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும்’ என்றார். எனினும் அந்த உடன்படிக்கை தொடர்பில் அவர் எந்த விபரத்தையும் வெளியிடவில்லை.
மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் ஊடாக ஈரான் அமைதி முன்மொழிவு ஒன்றை அமெரிக்காவுக்கு வழங்கியதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மைல் பகாயி உறுதி செய்தபோதும் அது பற்றி விபரத்தை அவர் வெளியிடவில்லை. இதனை பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்தபோதும் இதனையொட்டி முன்னேற்றம் காண்பது சிக்கலாக அமையக் கூடும் என்று இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பும் ‘தமது கோல்கம்பத்தை தொடர்ந்து இடம் மாற்றி வருகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கும் மேற்படி பாகிஸ்தான் தரப்பினர், ‘எமக்கு போதுமான கால அவகாசம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ஈரான் அரச ஊடகம் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் டிரம்பின் தாக்குதல் எச்சரிக்கைக்கு உறுதியாக பதில் அளித்திருந்தது. அவ்வாறான தாக்குதல் ‘மூலேபாய தவறு அல்லது தவறான கணிப்பாக அமையும்’ என்று எச்சரித்ததோடு ‘கடந்த காலத்தை விடவும் ஈரான் ஆயுதப் படைகள் மேலும் தயாராகவும் வலுவாகவும் உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவின் எந்தவொரு புதிய தாக்குதலின்போதும் உடன் பதிலடி கொடுக்க ஈரான் ஆயுதப் படைகள் தயாராக உள்ளது என்று ஈரான் கூட்டு இராணுவப் படைகளின் கட்டளை தளபதி கதம் அல் அன்பியா எச்சரித்துள்ளதாக ஈரான் டஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் தற்போது வழங்கி இருக்கும் முன்மொழிவு முன்னர் முன்வைத்தை பரிந்துரைகளின் பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளது என்று அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் முந்தைய முன்மொழிவை டிரம்ப் கடுமையாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவிலும் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது, ஈரானுக்கு நெருக்கமான பிராந்தியங்களில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது மற்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடு கோருவது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறாயினும் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த மார்ச் 2 இல் அங்கு இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்டவர்கள் 3,000 ஐ தாண்டியுள்ளது. அங்கு அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீடித்தபோதும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த திங்கட்கிழமை மேலும் ஐவர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



