இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நாளை 19 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் கடந்த வாரம் சீனாவுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயத்தை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதியின் இவ்விஜயம் இடம்பெறுகிறது.
சீனாவுக்கு நாளை விஜயம் செய்யவிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி, இரு தரப்பினருக்கும் இடையிலான விரிவான கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. அத்தோடு சீனப் பிரதமர் லி கியாங்குடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் ரஷ்ய ஜனாதிபதி கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்ய தாஸ் செய்தி நிறுவனம், 2001இல் இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அயலக உறவு மற்றும் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதன் 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ரஷ்ய ஜனாதிபதியின் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு புறப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் பெய்ஜிங் விஜயம் குறித்து அறிவிக்கப்பட்டமை தெரிந்ததே. ஏ.பி நியூஸ்



