மலட்டுத்தன்மைக்கு AI மூலம் புதிய சிகிச்சை

1 Min Read

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் உடலில் மிக அரிதாக மட்டுமே இருக்கும் விந்து செல்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய புதிய முறையை கொலம்பியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. ‘Sperm Track and Recovery’ (STAR) என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பின் மூலம் ஒரு தம்பதியினர் வெற்றிகரமாக கருவுற்றுள்ளனர். வானியலாளர்கள் விண்வெளியில் புதிய நட்சத்திரங்களைத் தேடுவதற்கு பயன்படுத்தும் அதே AI அல்காரிதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த STAR அமைப்பு எவ்வாறு செயற்படுகிறது?

மனித முடியை விட மெல்லிய குழாய்கள் கொண்ட சிறப்பு கண்ணாடித் தகடுகள் மூலம் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

அதிவேக கேமரா மூலம் ஒரு வினாடிக்கு 300 படங்கள் எடுக்கப்பட்டு, AI உடனடியாக விந்து செல்களை அடையாளம் காண்கிறது.கழிவுகளுக்கு இடையே மறைந்திருக்கும், வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத செல்களையும் AI துல்லியமாகக் கண்டுபிடிக்கிறது. செல் கண்டறியப்பட்ட சில மில்லி வினாடிகளுக்குள் ரோபோடிக் அமைப்பு மூலம் அது பாதுகாப்பாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. ‘கிளைன்பெல்டர் சிண்ட்ரோம்’ (Klinefelter syndrome) எனும் மரபணுப் பாதிப்பால் விந்து செல்கள் இல்லை என்று கருதப்பட்ட சாமுவேல் என்பவரின் திசு மாதிரியிலிருந்து STAR அமைப்பு 8 விந்து செல்களைக் கண்டறிந்தது.

அவற்றில் ஒன்று கருவாக்கப் பயன்படுத்தப்பட்டதால், அவரது மனைவி பெனெலோப் தற்போது கருவுற்றுள்ளார்.

வரும் ஜூலை மாதம் பிறக்கவுள்ள இந்தக் குழந்தை, STAR தொழில்நுட்பம் மூலம் உலகில் முதன்முறையாகப் பிறக்கும் ஆண் குழந்தையாக இருக்கும்.

உலகளவில் சுமார் 1% ஆண்கள் பாதிக்கப்படும் ‘அஸோஸ்பெர்மியா’ (Azoospermia) எனும் நிலைக்கு இது மிக முக்கியமான தீர்வாக அமையும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

தற்போது இந்த தொழில்நுட்பம் ஆராய்ச்சி கட்டத்திலேயே உள்ளதால், வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு முன் மேலும் பல மருத்துவப் பரிசோதனைகள் தேவை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முன்னேற்றம் மலட்டுத்தன்மை சிகிச்சையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *