ஈரானுடனான பேச்சுக்காக ‘ஹோர்முஸ்’ நடவடிக்கையை நிறுத்தியது அமெரிக்கா

4 Min Read

ஈரானுடன் விரிவான உடன்படிக்கை ஒன்றில் ‘பெரும் முன்னேற்றம்’ ஏற்பட்டிருப்பதாகக் கூறி, ஹோர்முஸ் நீரிணையின் ஊடாக கப்பல்கள் பயணிப்பதற்கு உதவும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை சிறிது காலத்திற்கு இடைநிறுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

‘சுதந்திர திட்டம்’ என அழைக்கப்படும் வளைகுடாவில் சிக்கி இருக்கும் கப்பல்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த திங்களன்று ஆரம்பித்தது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இந்த நீரிணை சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் 20 வீத பங்கு வகிக்கிறது.

‘நாம் பரஸ்பரம் இணக்கத்தைப் பெற்றிருக்கும் அதேநேரம் எமது முற்றுகை முழுவீச்சில் தொடரும். ஒப்பந்தத்தை இறுதி செய்து கையொப்பமிட முடியுமா இல்லையா என்பதைப் பார்ப்பதற்காக, சுதந்திர திட்டம் குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்படும்’ என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து பிரன்ட் ரக மசகு எண்ணெய் விலை நேற்று 1.2 வீதத்தால் குறைந்து பீப்பாய் ஒன்று 108.60 டொலர்களாக வீழ்ச்சி கண்டது. முந்தைய வர்த்தகத்தில் அது 4 வீதத்தால் குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. முந்தைய நாளில் 3.9 வீத வீழ்ச்சி கண்ட அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ. ரக எண்ணெய் விலை மேலும் 1.2 வீதம் சரிவை கண்டு பீப்பாய் ஒன்று 101.06 டொலர்களாக பதிவானது.

எனினும் மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ‘நியாயமான மற்றும் விரிவான உடன்படிக்கை ஒன்றை’ மாத்திரமே ஈரான் ஏற்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று வலியுறுத்தி இருந்தார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டிரம்ப் கூறி இருப்பதற்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் எமது சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கு எம்மால் முடியுமானதைச் செய்வோம்’ என்று பீஜிங்கில் சீன உயர் நிலை இராஜதந்திரியான வாங் யியை சந்தித்தபோது அராக்சி குறிப்பிட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘நியாயமான மற்றும் விரிவான உடன்படிக்கை ஒன்றை மாத்திரமே நாம் ஏற்போம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருப்பதாகக் கூறும் முன்னேற்றம் அல்லது ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் நடவடிக்கை எத்தனை காலம் இடைநிறுத்தப்படும் என்ற கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை உடன் பதில் அளிக்கவில்லை என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நீரிணையை ஈரான் கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகள் முன்னதாக வலியுறுத்தி இருந்தனர்.

எனினும் கண்ணிவெடிகளை வைப்பது, ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வேகமாக தாக்கும் படகுகளை பயன்படுத்துவதன் மூலம் ஈரான் இந்த நீரிணையை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது. பதில் நடவடிக்கையாக ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதோடு நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் முன்வந்துள்ளது.

வளைகுடாவில் சிக்கி இருக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அமெரிக்காவின் புதிய நடவடிக்கையால் ஹோர்முஸ் நிரிணையை ஒட்டி கடந்த இரு நாட்களாக மோதல்கள் அதிகரித்தன. இது கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் பலவீனமாக போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர் பிராந்தியம் எங்கும் பரவியதோடு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லெபனானிலும் இந்தப் போர் பரவியதோடு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அங்கு போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் வான் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டு மூன்று துணை மருத்துவர்கள் காயமடைந்திருக்கும் அதேநேரம் பாடசாலை ஒன்றும் சேதம் அடைந்திருப்பதாக வெலபனான் உள்ளூர் தரப்பினர் மற்றும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி அனடொலு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மெப்டவுன் நகரில் நேற்று இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் இரு நகரங்களில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேற்கு பக்காவில் உள்ள செலாயா சிறு நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது இடம்பெற்றிருக்கும் மற்றொரு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக தெற்கு லெபனானின் பல நகரங்களிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு துணை மருத்துவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். மறுபுறம் காசாவிலும் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேற்கு மற்றும் கிழக்கு காசாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *