ஈரான் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை பல மாதங்களுக்கு தொடரக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருக்கும் நிலையில் எண்ணெய் விலை நான்கு ஆண்டுகள் காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா முன்னெடுத்திருக்கும் முற்றுகை பல மாதங்களுக்கு நீடிப்பதால் ஏற்படும் தாக்கங்களை தவிர்ப்பது தொடர்பில் எண்ணெய் நிறுவனங்களுடன் டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று ஈரான் முடக்கி வைத்திருக்கும் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு உலக நாடுகளிடம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை உதவி கோரியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இழுபறி நீடிக்கும் நிலையிலேயே எண்ணெய் நிறுவன தலைவர்களை டிரம்ப் கடந்த செவ்வாயன்று சந்தித்துள்ளார். கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த முற்றுகையை செய்து வருகிறது.
எனினும் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தப் பிரச்சாரத்தை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் நிராகரித்துள்ள நிலையில், இதுவரை தாங்கள் கடைப்பிடித்த நிதானம் ‘இராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பளிக்கும் நோக்கத்தைக் கொண்டது’ என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் பொதுவெளியில் தொடர்ந்து பரஸ்பரம் எச்சரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், மத்திஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் மோதல் ஒன்றை தவிர்க்கும் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இரு தரப்பும் சாத்தியமான உடன்படிக்கை ஒன்றுக்கான செய்திகளை பரஸ்பரம் பரிமாற்றி வருவதாக பாகிஸ்தான் தரப்பினரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேச வேண்டுமாயின் ஈரானால் அழைக்க முடியும் என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் கடந்த புதனன்று பதிவிட்டிருந்தார். ஈரானால் ஒரே நிலைப்பாட்டில் இருக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அவர் (டிரம்ப்) மற்றும் எண்ணெய் நிர்வாகிகள், உலகளாவிய எண்ணெய் சந்தையை சமநிலைப்படுத்துவதற்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். மேலும், தேவையானால் பல மாதங்களுக்கு தற்போதைய முற்றுகையை தொடர்ந்து வைத்திருக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் அதனால் அமெரிக்க நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வழிகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்’ என்று வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஈரானுடனான அமைதிப் போச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் இழுபறியை முறியடிக்கும் முயற்சியாக ஈரான் மீது ‘குறுகிய மற்றும் சக்திவாய்ந்த’ தாக்குதல் அலை ஒன்றை நடத்த அமெரிக்க மத்திய கட்டளையகம் தயாராகி வருவதாக அமெரிக்காவின் எக்சியோஸ் செய்தித் தளம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அநாமதேசய ஆதாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தகவலில் ஈரானின் உட்கட்டமைப்புகள் இலக்குவைக்கப்படக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கான புதிய திட்டங்கள் குறித்து, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவரிடமிருந்து டிரம்ப் நேற்று விளக்கம் ஒன்றை பெறவிருந்ததாகவும் அந்த செய்தித் தளம் குறிப்பிட்டிருந்தது. இதனையடத்து ஆசிய சந்தையில் எண்ணெய் விலை சடுதியான அதிகாரிப்பை காட்டியது. பிரண்ட் ரக மசகு எண்ணெய் 7 வீதத்திற்கும் மேல் அதிகரித்ததை அடுத்து பீப்பாய் ஒன்று 126 டொலர்களாக உயர்ந்தது. இது 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவில் படையெடுப்பை ஆரம்பித்தது தொடக்கம் பதிவான பெரும் அதிகரிப்பாக அமைந்தது.
ஈரானிய போரினால் அமெரிக்க இராணுவத்திற்கு 25 பில்லியன் டொலர் இழப்பு எற்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதலில் ஏற்பட்ட இழப்பு தொடர்பிலான முதலாவது அறிவிப்பாக இது உள்ளது.
சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் 20 வீத பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை, அச்சுறுத்தல் தொடரும் வரையில் முடக்குவதாக ஈரான் உறுதி அளித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது.
இதேவேளை போர் நிறுத்தத்தை மீறி லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் நேற்று மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மறுபுறம் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இருவர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 2,316 பேர் காயமடைந்துள்ளனர்.



