போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

3 Min Read

போர் நிறுத்தத்தை மீறி தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் சிவில் பாதுகாப்பு மீட்பாளர்கள் உட்பட மேலும் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான்–அமெரிக்கா இடையிலான அமைதி முயற்சிகள் ஸ்தம்பித்திருக்கும் சூழலிலேயே லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேல், தெற்கு லெபனானில் தரைவழியாக ஊடுருவியுள்ளது. லெபனான் அரசுடன் அமெரிக்க மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் கடந்த ஏப்ரல் 17 இல் போர் நிறுத்தம் ஒன்றை எட்டியபோதும் தெற்கு லெபனானலில் அதன் தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

லெபனான் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலிய எதிரிகள் பஜிதால் சூன் நகரில் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதன்போது லெபனான் சிவில் பாதுகாப்பு பிரிவின் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரிவினர் மீட்புப் பணி ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு நகரான ஜ்வையாவில் இஸ்ரேல் நடத்திய பிறிதொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு ஐந்து சிறுவர்கள் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட மேலும் 15 பேர் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து தெற்கு லெபனானில் ஜப்சிட் நகரில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல் ஒன்றில் மேலும் இருவர் கொல்லப்பட்டு 13 பேர் காயமடைந்ததாக அந்த அமைச்சு தெரிவித்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் இரு துருப்பினர் காயமடைந்ததாக லெபனான் இராணுவம் கூறியது. போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் லெபனான் துருப்புகள் இலக்கு வைக்கப்படுவது இது முதல் முறையாகும்.

‘இஸ்ரேல் சர்வதேச சட்டம் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பதற்கான சாசனத்தை தொடர்ந்து மீறுகிறது’ என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் குற்றம்சாட்டியுள்ளார்.

தெற்கு லெபனானில் பல டஜன் கிராமங்களைச் சேர்ந்த மக்களை வடக்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் புதிய உத்தரவை வெளியிட்டிருக்கும் நிலையிலேயே அங்கு உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. தெற்கு லெபனானில் மஞ்சள் கோடு என அழைக்கப்படும் இஸ்ரேலிய எல்லையை ஒட்டி கணிசமான நிலப்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருப்பதோடு தற்போது அதற்கு வெளியிலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மறுபுறம் இஸ்ரேலிய துருப்புகள் நிலைகொண்டிருக்கும் பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான ஆளில்லா விமானத் தாக்குதலில் கடந்த திங்களன்று ஒரு இஸ்ரேலிய படை வீரர் கடும் காயத்துக்கு உள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆரம்பித்த போரில் ஈரானுக்கு ஆதாரவாக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த மார்ச் 2 ஆம் திகதி இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியதை அடுத்தே மத்திய கிழக்கு போரின் மற்றொரு முனையாக லெபனானிலும் போர் பரவியது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே 2024 இல் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்ட நிலையில் அதனை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் காசாவிலும் தொடர்ந்து போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 2,308 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் கடந்த 2023 ஒக்டோபரில் இஸ்ரேல் போரை ஆரம்பித்தது தொடக்கம் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கையும் 72,599 ஆக உயர்ந்திருப்பதோடு 172,411 பேர் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கிழக்கு ரமல்லா, சில்வான் நகரில் இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய சுற்றிவளைப்பில் பலஸ்தீன ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 37 வயது அப்துல் ஹலீம் என்பவர் கொல்லப்பட்டிருப்பதாக சிவில் விவகாரங்களின் பொது நிர்வாகத்தை மேற்கோள்காட்டி பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *