தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில், விமானக் கொட்டகையில் சிறிய விமானம் ஒன்று மோதியதில் விமானி உட்பட இருவர் உயிரிழந்ததோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெற்கு அவுஸ்திரேலியாவின் முதல்வர் பீட்டர் மாலினௌஸ்காஸ் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று பிற்பகல் அடிலெய்டில் உள்ள பாராஃபீல்ட் விமான நிலையத்தில் கணிசமான அளவு எரிபொருள் சேமிக்கப்பட்டிருந்த ஒரு விமானக் கொட்டகையில் மோதியதைத் தொடர்ந்து கொட்டகையில் தீ ஏற்பட்டது. அந்த தீ தற்போது அணைக்கப்பட்டு விட்டது, மேலும் விமானத்தளம் மூடப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
விபத்திற்கு உள்ளான விமானம் இரட்டை எஞ்சின் கொண்ட டைமண்ட் டி.ஏ.42 ரகத்தைச் சேர்ந்தது என அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.அவசர சேவைகள் பிரிவினர் இச்சம்பவத்தைக் கையாள்வதால், அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். த கார்டியன்



