தமிழகத்திலிருந்து தப்பிவர முயன்ற அறுவர் கைது

1 Min Read

பொருளாதார நெருக்கடி காரணமாகத் தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற இலங்கைத் தமிழர்கள், மீண்டும் சட்டவிரோத முறையில் இலங்கைக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு நாட்டில் நிலவிய கடும் பொருளாதாரச் சரிவு காரணமாக, சுமார் 300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாகத் தனுஷ்கோடிக்குச் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மண்டபம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது இலங்கையில் நிலைமை சீரடைந்து வருவதால், தங்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் தமிழக அரசுக்கும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும், அவர்கள் சட்டவிரோத முறையில் இந்தியாவுக்குள் நுழைந்ததால், அவர்களைத் தூதரக ரீதியாகத் திருப்பி அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதனால் விரக்தியடைந்த அகதிகள் பலர், மீண்டும் சட்டவிரோதப் படகுகள் மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், மண்டபம் தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த மூவரை கியூ பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் என்பதும், மீண்டும் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.இவர்களுக்கு உதவியதாக மண்டபம் பகுதியைச் சேர்ந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். கைதான ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *