பாகிஸ்தானின் முக்கிய மத்தியஸ்தர் ஒருவர் ஈரான் விரைந்திருப்பதோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டு ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவது குறித்து நம்பிக்கையை வெளியிட்டிருக்கும் நிலையில் மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (15) கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை அண்டை நாடான லெபனானுடன் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புடன் ஆறு வாரத்திற்கு மேல் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே முதல்முறை நேரடி பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக டிரம்ப் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.
எவ்வாறாயினும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு ஹிஸ்புல்லா போராளிகளும் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில், லெபனானில் போர் நிறுத்தமும் இழுபறிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்து. இந்நிலையில் ‘உடன்படிக்கை ஒன்றை எட்டுவது தொடர்பில் நாம் எதிர்பார்ப்புடன் உள்ளோம்’ என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரொலின் லீவிட் புதனன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்று வரும் உரையாடல்கள் ‘ஆக்கபூர்வமானதாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளது’ என்று அவர் கூறினார்.
எனினும் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி எட்டப்பட்ட இரு தரப்புக்கு இடையிலான இரண்டு வார போர் நிறுத்தத்தை நீடிக்கும் கோரிக்கையை அமெரிக்கா விடுக்கவில்லை என்று அவர் நிராகரித்துள்ளார். நேரடி பேச்சுவார்த்தை இன்னும் உறுதி செய்யப்படாதபோதும் அது மீண்டும் பாகிஸ்தானில் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக லீவிட் கூறினார்.
அமைதி முயற்சியாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனிர் ஈரான் விரைந்துள்ளார். கடைசியாக இடம்பெற்ற பேச்சவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த அவர், இரு தரப்புக்கும் இடையிலான முரண்பாடுகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவன த்திற்கு தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் வெற்றிபெற வேண்டுமாயின் ஈரானின் உரிமைகள், நலன்கள் மற்றும் கௌரவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அனுசக்தி அமைப்பின் தலைவர் முஹமது இஸ்லாமி வலியுறுத்தியுள்ளார்.
‘ஆனால், அது வழக்கம்போன்று, ஏமாற்றுதலையும், உண்மையான அர்ப்பணிப்பின்மையையும், ஒப்பந்தங்களையும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளையும் கடைப்பிடிக்கத் தவறுவதையும் சார்ந்தே தொடர்ந்தால், அதனால் இயல்பாகவே வெற்றி பெற முடியாது’ என்றும் டெஹ்ரானில் நடைபெற்ற அரச ஆதரவு பேரணி ஒன்றில் உரையாற்றும்போது அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு ஒன்று எட்டப்படாது முடிவுக்கு வந்தது. வளைகுடாவில் உள்ள பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களுக்கு மத்தியில் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடியை இந்தப் போர் உருவாக்கியதோடு ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை (13) முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. ஹொர்முஸ் நீரிணையை ஒட்டி அமெரிக்கா முன்னெடுத்து வரும் இந்த முற்றுகையில் புதிதாக பத்து கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் நேற்று தெரிவித்தது.
மறுபுறம் அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் ஓமன் கடலில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்து, ‘ஈரானின் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை’ உருவாக்கினால், அது ‘போர் நிறுத்தத்தை மீறுவதற்கான ஒரு முன்னோடியாக’ அமையும் என்று ஈரானில் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் நாட்டின் மிக உயர்ந்த செயல்பாட்டுக் கட்டளையகமான காதம் அல்–அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்துல்லாஹி கூறியுள்ளார்.
இதன் விளைவாக, ஈரானின் ஆயுதப் படைகள் ‘பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடலில் எந்தவொரு ஏற்றுமதி அல்லது இறக்குமதியையும் தொடர அனுமதிக்காது’ என்று அப்துல்லாஹி மேலும் கூறினார்.
சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் 20 வீத பங்கு வகிகும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி இருப்பது மற்றும் தற்போது முன்னெடுத்து வரும் முற்றுகை சர்வதேச அளவில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளது.




