எப்ஸ்டீனின் தனியார் விமானங்கள் பிரித்தானியாவின் விமானப்படை தளங்களில் தரையிறங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்த பயன்படுத்திய தனியார் ஜெட் விமானங்கள் தரையிறங்க பிரித்தானியாவின் ராயல் விமானப்படை தளங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, கடந்த 20 ஆண்டுகளுக்கான பாதுகாப்புத் துறை ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான ஒரு துரும்பையும் அலசாமல் விடக்கூடாது (leave no stone unturned) என அவர் வலியுறுத்தியதாக The Telegraph பத்திரிகை தெரிவித்துள்ளது.

2000 டிசம்பரில் எப்ஸ்டீன், தனது Gulfstream ஜெட்டில் நோர்ஃபோக் விமானப்படை தளத்தில் தரையிறங்கி, பின்னர் சாண்ட்ரிங்ஹாம் அரண்மனைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அவர் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆண்ட்ரூ, அரசு ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பிரித்தானிய வர்த்தக ஆணையராக இருந்த பீட்டர் மான்டல்சன் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் எப்ஸ்டீனுடன் நீண்டகால தொடர்பு வைத்திருந்ததாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மோசடி தடுப்பு அலுவலகமும் (OLAF) விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைகள், எப்ஸ்டீனின் பிரித்தானிய தொடர்புகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் என கூறப்படுகிறது.




