நாளை முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்தி, வடமத்தியில் மழை – சில பகுதிகளில் இன்று பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

2 Min Read

நாளை (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், நாளை முதல் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றையதினம் (27) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய  மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொணராகலை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ. வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
மழை நிலைமை:
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறையிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகீழ் திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *