22 தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று பரிசீலனை

2 Min Read

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க குறித் இந்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.

நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் மேற்படி நீதியரசர்கள் குழாமின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் சுமார் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18ஆம் திகதி நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு எதிராக எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் சங்கங்களும், சிவில் அமைப்புகள் சிலவும் சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.அதேவேளை, ஆளும் தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி உள்ளிட்ட சில தரப்பினர், சட்டமூலத்திற்கு ஆதரவாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்துள்ள அனைத்து தரப்பினரும் நேற்று உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்யத் தீர்மானித்திருந்தனர்.

எவ்வாறாயினும் எத்தகைய தடைகள் எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை கொண்டுவரும் தீர்மானத்திலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

அத்துடன் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் நாட்டின் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், சட்டவாட்சியும் நிலைநாட்டப்படும்.’எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்;

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அனைத்து மனுதாரர்களும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்தப் பிரச்சினையை உயர் நீதிமன்றத்தினால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது என்பதே அனைத்து மனுதாரர்களினதும் கோரிக்கையாகும்.

ஏனெனில், உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கே இந்தத் திருத்தத்தின் மூலம் நேரடியாக நன்மை கிடைக்கக்கூடிய நிலை உள்ளது. ‘ஒருவர் தமது சொந்த வழக்கைத் தாமே விசாரிக்கக் கூடாது’ என்ற அடிப்படை சட்டக் கோட்பாடே இதன் மூலம் வெளிப்படையாக மீறப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்க இந்த விடயத்தை மக்களின் தீர்ப்புக்கு விட வேண்டும் எனவும், நாட்டின் இறைமை மக்களிடமே காணப்படுவதால், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் ஜீ.எல். பீரிஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *