இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையான ஷின் பெட் நேற்று முன்தினம் மாலை விடுத்த அறிக்கையில், ‘யாயிர் நெதன்யாகுவுக்கு தீங்கு விளைவிப்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் இருந்தது. அதன் காரணமாக அவரையும் அவரது பாதுகாப்புக் குழுவையும் அவசரமாக வெளியேற்றி இஸ்ரேலுக்குத் திரும்ப அழைத்து வர முடிவு செய்யப்பட்டது’ என்று கூறியுள்ளது.
அந்த அச்சுறுத்தலின் மூலத்தை அந்த அமைப்பு குறிப்பிடவில்லை.
‘ஈரான் என் மகன்களில் ஒருவரைக் குறிவைத்தது. என் மகன்களில் ஒருவரைக் கொல்ல, கொலை செய்ய முயன்றது’ என்று பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் செனல் -14 இடம் கூறியதைத் தொடர்ந்து இவ்வறிக்கை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தொடராகக் கண்காணிக்கப்பட்ட யாயிர் நெதன்யாகு, உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது தனிப்பட்ட உடைமைகளை எடுக்காமல் அங்கிருந்து புறப்பட்டு, நேரடியாக இஸ்ரேலுக்குத் திரும்பியதாக நியூஸ்மெக்ஸ் தெரிவித்துள்ளது.
அல் ஜசீரா




