22 ஆதரவாக ஆளுங்கட்சி இடையீட்டு மனு

1 Min Read

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இரு அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித இசிவர வாகிஷ்ட ஆரச்சி ஆகியோர் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் சட்டபூர்வத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதிப்பதாகவும், சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.இந்த நிலையில் இதற்கு எதிராக தாம் வழக்கில் இடையீட்டாளராக இணைந்து சட்டத்தரணி ஊடாக விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி கோரியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தரப்பினர் முன்வைத்துள்ள சட்ட வாதங்கள் ஆதாரமற்றவை மற்றும் சட்டரீதியாக நிலைக்க முடியாதவை என லக்ஷ்மன் நிபுண ஆரச்சி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.22ஆவது திருத்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரித்தல், பிரதம நீதியரசரின் ஓய்வு பெறும் திகதி தொடர்பான ஏற்பாடுகளை செய்தல் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது என கூறியுள்ள லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, இந்தத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படை விதிகளுக்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கும் முரணானதல்ல என்றும், இதனை நிறைவேற்ற பாராளுமன்றத்திற்கு சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாகவும் அவர் தமது மனுவில் வாதிட்டுள்ளார்.

அத்துடன், 22ஆவது திருத்தச் சட்டமூலம் சர்வுஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என அறிவிக்குமாறும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்குமாறும் உயர் நீதிமன்றத்திடம் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *