அடுத்து வரும் 2026/2027 பெரும் போகத்தின் போது வயல் நிலங்களில் சோளம் பயிரிடுவதற்கான சாத்தியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் அநுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பதில் மாவட்ட செயலாளர் திருமதி சந்தியா அபேசேகர தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாயத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
எல் நினோ (El Niño) நிலைமை இலங்கைக்கும் குறிப்பாக வடமத்திய மாகாணத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் அதன் காரணமாக விவசாயத் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கு குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக கன்னொருவ இயற்கை வள முகாமைத்துவ நிலையத்தின் பிரதம விவசாய விஞ்ஞானி (விவசாய காலநிலையியல்) சி.கே. விக்கிரமதுங்க கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளித்தார்.
சோளம் பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலைமை மற்றும் தேசிய தேவைகள் தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இங்கு ஏற்படுத்தப்பட்டதுடன், 2026/2027 பெரும் போகத்தில் வயல் நிலங்களில் சோளம் பயிரிடும் முறை தொடர்பாக வடமேல் மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி புத்திக அபேசிங்க விளக்கமளித்தார்.
இம்முறை இலங்கையின் வயல் நிலங்களில் சோளம் பயிரிடுவதற்காக 40,000 ஹெக்டேயர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இலக்கில் வடமத்திய மாகாணத்தின் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் சுமார் 2,000 ஹெக்டேயர் பரப்பளவில் சோளம் பயிரிட எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.




