– இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புதிய எதிர்பார்ப்பு!
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் (Eric S. Meyer) தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) மாலை கொழும்பை வந்தடைந்துள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின்படி, அவர் தனது பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவம் என அவர் தனது வருகையின் போது மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இரு ஜனநாயக நாடுகளுக்கிடையிலான பலமான அடித்தளத்தின் அடிப்படையில் உறவுகளை மேலும் கட்டியெழுப்புவதற்குத் தான் எதிர்பார்ப்பதாகத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தகங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், இரு நாடுகளினதும் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துதல் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் அதிகளவிலான செழிப்பை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் அமெரிக்க-இலங்கை பங்காளியாண்மையை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 29ஆவது அமெரிக்கத் தூதுவராகச் சேவையாற்றுவதற்கான இந்த வாய்ப்புக் குறித்துத் தான் பெரும் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தூதுவராகப் பெயரிடப்படுவதற்கு முன்னர், அவர் நோர்வேயில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
அதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்திற்கான சிரேஷ்ட பணியக அதிகாரியாகப் பணியாற்றிப் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




