நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளது.

Admin
By
Admin
1 Min Read

அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96% அதாவது 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.

இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 13,533 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக மத்திய மாகாணத்தில் 8,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,558 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் பார்க்கும் போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 19,631 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் 18,245 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,613 நோயாளர்களும், மாத்தறையில் 6,036 நோயாளர்களும், களுத்துறையில் 5,951 நோயாளர்களும், காலியில் 5,039 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,935 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 3,700 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவ்வருடத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,968 ஆகும்.

அத்துடன் ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்துத் தங்கள் சூழலைத் தூய்மையாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *