இலங்கை அணி அரையிறுதியில் இன்று சிங்கப்பூருடன் பலப்பரீட்சை

1 Min Read

ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் 14ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டியில் இலங்கை அணி இன்று (14) அரையிறுதியில் நடப்புச் சம்பியன் சிங்கப்பூருடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கிண்ணத்திற்கான ஆரம்ப சுற்றுப் போட்டி முடிவில் இலங்கை அணி மூன்று வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நிலையிலேயே புள்ளிப் பட்டியில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ள சிங்கப்பூரை எதிர்கொள்ளவுள்ளது. இதில் முதல் இடம் வந்த மலேசியா மற்றும் நான்காவது இடத்தை பிடித்த ஹொங்கொங் அணிகள் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் மோதவுள்ளன.

இலங்கை அணி ஆரம்ப சுற்றில் சிங்கப்பூரிடம் மாத்திரம் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் இலங்கை அணி கடுமையாக போராடியபோதும் 62–51 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசியாக 2024 ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இலங்கை மகளிர் அணி அந்தப் போட்டியில் சிங்கப்பூரிடம் தோல்வியை சந்தித்தே கிண்ணத்தை இழந்தது. இந்நிலையில் வலுவான சிங்கப்பூரின் சவாலை எதிர்கொண்டு இன்றைய தினத்தில் வெற்றி பெற்றாலேயே இலங்கை அணிக்கு சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டி வரை முன்னேற முடியும். எவ்வாறாயினும் இலங்கை அணி இம்முறை தொடரில் கடைசியாக ஆடிய மலேசியா, இந்தியா மற்றும் மாலைதீவு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றியீட்டிய உற்சாகத்துடனேயே இன்றைய தினத்தில் அரையிறுதில் ஆடவுள்ளது.

ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டி 2027 இல் சிட்னியில் நடைபெறும் உலகக் கிண்ண வலைப்பந்து போட்டிக்கான தகுதிகாண் போட்டியாகவும் அமைந்துள்ளது. இதன்படி ஆசிய சம்பியன்சிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *