ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ரொக்கட்டின் நான்கு தொன் எடை கொண்ட பாகமொன்று, மணிக்கு 5,400 மைல் வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் நேற்று மோதுண்டதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல் விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த, கைவிடப்பட்ட இந்த ரொக்கட்டின் நான்கு தொன் எடை கொண்ட பாகம், எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் நிலவில் மோதுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இது நிலவில் ஒரு புதிய பள்ளத்தை உருவாக்கியிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அது சுமார் 60 அடி அகலமும் 12 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளமாக இருக்கலாம். இம்மோதுதலின் போது தூசி மற்றும் பாறைகள் சிதறல்கள் வெளியே வீசப்பட்டிருக்கும் என்று நாசா கூறியுள்ளது.
சந்திரனின் மேற்பரப்பில் மோதுண்டுள்ள இப்பாகம் ஒரு கட்டிடத்தின் அளவைக் கொண்டதாகும்.
இந்த மோதலின் விளைவாக பல மைல் நீளத்திற்கு சந்திரத் தூசி கிளம்பி இருக்கும் என்றும், அது சூரிய ஒளியால் ஒளிரூட்டப்பட்டாலும், பூமியிலிருந்து வெற்றுக் கண்ணால் பார்ப்பது கடினமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டது.
நிலவில் மனிதனால் உருவாக்கப்பட்ட சுமார் 3,000 விண்வெளி குப்பை பொருட்கள் உள்ளன, அவற்றின் மொத்த எடை சுமார் 190 தொன்களாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
த கார்டியன், பி.பி.சி




