சாத்தானிய வசனங்கள் என்ற சர்ச்சைக்குரிய நூலை எழுதி வெளியிட்ட சல்மான் ருஷ்டியைக் கொல்ல முயன்றதற்காக ஏற்கனவே 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அமெரிக்கர் ஒருவர், பயங்கரவாதக் குழுவொன்றுக்கு பொருள் ரீதியான ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட மேலதிக குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்தவரும் லெபனான் நாட்டிலும் குடியுரிமை கொண்டுள்ளவருமான ஹாடி மத்தாருக்கே நிவ்யோர்க் கூட்டாட்சி நீதிமன்றம் நேற்று முன்தினம் மேற்படி தீர்ப்பை அளித்துள்ளது.
2022 ஓகஸ்ட்டில் ஒரு திறந்தவெளி அரங்க மேடையில் சல்மான் ருஷ்டி மீது 28 வயதான மத்தார் என்ற பெயருடைய நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பான கொலை முயற்சி குற்றத்திற்காக ஏற்கனவே 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு நிவ்யோர்க் மாநில சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் நிவ்யோர்க் கூட்டாட்சி நீதிமன்றம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளால் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கு பொருள் ரீதியாக உதவி வழங்கியமை மற்றும் பன்னாட்டுப் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டமை ஆகிய குற்றங்களுக்காக இவர் குற்றவாளி என நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது. இந்நீதிமன்றத் தீர்ப்பின் படி, இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என நீதித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சி.என்.என்.




