அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா கூட்டிணைந்து ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து பிராந்தியத்தில் மீண்டும் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. ஜோர்தனில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதோடு, அமெரிக்காவும் ஈரான் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா கடந்த சில நாட்களாக நிறுத்தி இருந்த நிலையிலேயே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. புதிய மோதல்கள் மற்றும் இராஜதந்திர முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டிக்கும் நிலையில் கடந்த வாரத்தின் பின்னர் எண்ணெய் விலை முதல் முறை அதிகரித்துள்ளது.
சவூதி அரேபிய எண்ணெய் நிலைகளை இலக்கு வைத்து ஈராக்கில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது கூட்டு தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா மற்றும் சவூதி அறிவித்துள்ளன.
ஈராக்கின் அதிகாரபூர்வ பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டுள்ள, ஈரான் ஆதரவு பெற்ற சக்திவாய்ந்த துணை இராணுவ அமைப்பின் மீதே அமெரிக்கா மற்றும் சவூதி கூட்டுப் படைகள் ஈராக் முழுவதும் உள்ள பல தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் அந்தப் படையின் குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டு, மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு ஈராக்கின் மொசுல் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து உயிரிழந்த போராளிகளின் உடல்களை சுமந்து சென்ற ஆடவர்கள், ஷியா மதப்பிரிவு ஆதரவு முழக்கங்களையும், ‘அமெரிக்கா ஒழிக!’ என்ற கோஷங்களையும் எழுப்பினர். இந்தக் காட்சிகள் ஈராக்கின் அல்-அஹத் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் பதிவாகியுள்ளன.
ஈரான் மீது தொடர்ச்சியாக 13 நாட்கள் உக்கிர தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை அந்தத் தாக்குதலை நிறுத்திய பின்னர் முன்னெடுக்கும் பிரதான படை நடவடிக்கையாக இது உள்ளது. இந்தப் போர் அரம்பித்தது தொடக்கம் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் ஒன்றை நடத்தியதை சவூதி அரேபியா முதல்முறை வெளிப்படையாக அறிவித்த சம்பவமாகவும் இது உள்ளது. சுன்னி பெரும்பான்மை சவூதி அரேபியா, ஷயா ஆயுதக் குழு ஒன்றின் மீதான தாக்குதல் மோதலை மற்றொரு முனைக்கு விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. ஈரானுடன் நெருக்கமான உறவை பேணும் ஈராக்கின் ஷியா தலைமை அரசு இந்தத் தாக்குதலை அடுத்து அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஈராக்கில் ஈரான் ஆதரவு துணைப்படைகளை கட்டுப்படுத்த ஈராக் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவ வந்தபோதும் அவ்வாறான முயற்சி உள்ளாட்டில் பதற்றத்தையே அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சவூதி அரேபியா மற்றொரு முனையில் யெமனின் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. செங்கடலில் சவூதியின் எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிராக ஹூத்திக்கள் முற்றுகையை அறிவித்திருப்பதோடு சவூதி கப்பல்கள் மற்றும் எண்ணெய் நிலைகள் மீது கடந்த ஒரு வாரமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஈராக் மீது சவூதி அரேபியாவுடன் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் முயற்சியை, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது.
ஈரான் ஏவிய ஐந்து ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஜோர்தானின் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் உயிரிழந்த நான்கு அமெரிக்க இராணுவ வீரர்களில் மூவர் ஜோர்தானில் கொல்லப்பட்டனர். அங்கு உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், ஈரான் ஆதரவு குழுக்களின் முக்கிய இலக்குகளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரானின் புரட்சிக் காவல்படை வெளியிட்ட அறிவிப்பில், ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி பல பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், மேலும் ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதிக்கப்படாத பாதையில் செல்ல முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் ஈரானின் வடமேற்கே மேற்கு அசர்பைஜான் மாகாணத்தில் அமெரிக்க நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘மாகாணத்தில் மக்கள் வசிக்காத பகுதி ஒன்றில் அமெரிக்க எதிரி ஏவுகணை தாக்கியதில், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை’ என்று ஈரான் பார்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பிராந்தியத்தில் மோதல் அதிகரித்ததை அடுத்து எண்ணெய் விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை நேற்றுக் காலை ஒரு பீப்பாய் சுமார் 88 அமெரிக்க டொலராக வர்த்தகமானது. இது 4.6 வீத விலை அதிகரிப்பாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தியதாக அறிவிப்பு வெளியாகும் முன்னர், பிரெண்ட் மசகு எண்ணெய் மே மாதத்திற்கு பின் முதல் மறையாக பீப்பாய் ஒன்று 100 அமெரிக்க டொலர்களை தாண்டியது. எனினும் பரஸ்பர தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து 80 டொலர்கள் வரை சரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




