மீண்டெழும் செலவினத்தை குறைத்து மூலதனச் செலவை அதிகரிக்க திட்டம்

2 Min Read

மீண்டெழும் செலவினத்தை ஒன்பது வீதமளவில் குறைத்து நான்கு வீதமாக உள்ள மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது.இதனால் 09 வீத மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 04 வீதமாக உள்ள மூலதனச் செலவை அதிகரிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டின் மூலதனச் செலவினமாக இரண்டு டிரில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அது சுமார் 40 வீத அதிகரிப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ், காலி மாவட்ட அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட காலி மாவட்டச் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

திறைசேரிக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாவும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படுவதே எமது எதிர்பார்ப்பு என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினர் கடன் செலுத்த அவசியமற்ற, நிதி ஒழுக்கத்தைக் கொண்ட நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேச அறிக்கைகளில் தற்பொழுது இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூகக் குறியீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், ஒரு காலத்தில் கடன் செலுத்த முடியாத, ஊழலும் சமூகக் குற்றங்களும் நிறைந்த நாடாக சர்வதேச அளவில் பேசப்பட்ட நமது நாடு, இன்று சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஊழல் குறைந்த நாடாக சர்வதேச அளவில் பாராட்டைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச துறையின் செயல்திறனை மேம்படுத்துவதுடன் மக்கள் வீட்டிலிருந்தவாறே தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு, அரசாங்கம் எதிர்கால வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அரச சேவையில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட வல்லுநர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச துறையை வேலைவாய்ப்புகளை நிரப்பும் இடமாக மாற்றியதன் மூலம் அரச கட்டமைப்பு பாதகமான பொருளாதாரப் பின்விளைவுகளை முகங்கொடுக்க நேரிட்டது என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வெளிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதன் ஊடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் விளையாட்டுக் கலாசாரத்தை உருவாக்குவது, போதைப்பொருள் அச்சுறுத்தல் போன்ற பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் என்றும், ஒழுக்கமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதற்காக விளையாட்டுத் துறைக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் ஒதுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும், அந்த நோக்கத்திற்காக ஒரு தேசியத் திட்டத்தை உடனடியாகச் செயலற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *