பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் யாழ். மாவட்டத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட ‘யுனைடெட் கபடி பிரீமியர் லீக்’ போட்டியில், செல்லமணி வொரியஸ் அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
கடந்த ஞாயிற்றுpக்கிழமை (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் செல்லமணி வொரியஸ் அணியை எதிர்த்து சோழா வீரன்ஸ் அணி மோதியது. போட்டியின் போது இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்று சம பலத்துடன் காணப்பட்டன. எனினும், ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த செல்லமணி வொரியஸ் 37–26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியீட்டியது.
வெற்றியீட்டிய செல்லமணி வாரியஸ் அணி ஒரு இலட்சம் ரூபாவை வென்றதோடு, இரண்டாம் இடத்தைப் பிடித்த சோழா வீரன்ஸ் அணிக்கு 75 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.




