தம்புள்ளையை வீழ்த்திய கோல் அணி ஆதிக்கம்

1 Min Read

தம்புள்ளை சிக்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 44 ஓட்டங்களால் வெற்றியீட்டிய கோல் கலன்ட்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. கோல் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் பெறும் நான்காவது வெற்றி இதுவென்பதோடு அந்த 8 புள்ளிகளுடனேயே முதலிடத்தில் உள்ளது. ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் அணிக்கு மத்திய வரிசையில் சாமிக்க கருணாரத்ன 34 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் கோல் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்றது.

தம்புள்ளை அணித் தலைவர் துஷ்மன்த சமீர ஐந்து விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பதிலெடுத்தாட வந்த தம்புள்ளை சிக்சர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களையே பெற்றது. சச்சிந்து கொலம்பகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற கண்டி றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் 93 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *