உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேற்படி யோசனை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மேற்படி விவகாரம் தொடர்பில் அரசியல் மற்றும் சட்டத்துறையில் கடுமையான வாத விவாதங்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் அமைச்சரவையினால் மேற்படி யோசனைக்கு நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிக்குமாறு தமக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதற்கிணங்க குறித்த அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே வேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டால், அது குறித்து கலந்துரையாட தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதாக வரையறுக்கப்பட்டுள்ள முறையே 63 மற்றும் 65 வயது எல்லையை, அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் வீதம் நீடிப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்திருந்தது.
அதற்கிணங்கவே நேற்றைய தினம் அமைச்சரவையில் அது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.




