– வங்கி மற்றும் தொலைபேசி தரவுகளை பெற உத்தரவு
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து சுமார் ரூ. 20 மில்லியன் பணத்தைச் சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத தினஜித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் முன்னாள் அமைச்சரின் மகன், வர்த்தகர் ஒருவரின் மகன் மற்றும் ஒரு சீனப் பிரஜையும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், ஐந்தாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அநுத தினஜித் பண்டாரவின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் வங்கித் தரவு அறிக்கைகளை உடனடியாகப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு நீதவான் இதன்போது கட்டளையிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு நேற்றைய தினம் (22) நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




