அரசாங்கத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தற்போது நீதிமன்றத்தைப் புறக்கணித்துத் தலைமறைவாக இருக்கும் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் பிடிவிறாந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான ஜாலிய விக்ரமசூரிய தொடர்ச்சியாக நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, இந்த நிதி மோசடி விவகாரம் தொடர்பாகச் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளைப் பெற்று, அது குறித்த மேலதிக விபரங்களை எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதவான் உத்தரவிட்டார்.




