– உக்ரைன் போர்க்களத்தில் பெரும் அதிரடி மாற்றம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelensky) அந்நாட்டின் இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியை (Oleksandr Syrskyi) அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
நாட்டின் மிகவும் பிரபலமான பாதுகாப்பு அமைச்சராகக் கருதப்பட்ட மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) அண்மையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வெடித்த மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் போது தலைநகர் கீவ்வினை வெற்றிகரமாகப் பாதுகாத்தமைக்காகச் சிர்ஸ்கி பாராட்டப்பட்ட போதிலும், தற்போது நிலவும் போர்ச் சூழலுக்கு ஏற்ப இராணுவத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வர அவர் தயங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்த 35 வயதுடைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பெடோரோவ், ட்ரோன்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரைன் இராணுவத்தை நவீனமயப்படுத்தியமைக்காகப் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
அவருக்கும் 60 வயதுடைய தளபதி சிர்ஸ்கிக்கும் இடையில் நிலவிய முரண்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஆறு நாட்களாகத் தொடர்ந்த மக்கள் போராட்டங்களினால் செலன்ஸ்கிக்கு ஏற்பட்ட கடும் அழுத்தமே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பழைய பாணி இராணுவத் தளபதிக்கும், நவீன சிந்தனை கொண்ட பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான மோதலில், இறுதியில் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புதிய மாற்றத்திற்கு செலன்ஸ்கி வழிவிட்டுள்ளார்.
ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்குப் பதிலாக, 43 வயதுடைய அனுபவம் வாய்ந்த மற்றும் வீரமிக்க ஜெனரலான மைக்கைலோ டிராபாட்டி (Mykhailo Drapatyi) புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
“நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு மதிப்பளித்து, முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்” எனத் தனது நியமனத்தின் பின்னர் டிராபாட்டி உறுதியளித்துள்ளார்.
புதிய தளபதி மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இணைந்து, ஆளில்லா விமானப் பயன்பாடு மற்றும் இராணுவச் சீர்திருத்தங்கள் உள்ளடங்கிய புதிய பாதுகாப்பு மூலோபாயத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி செலன்ஸ்கி தற்போது பணிப்புரை விடுத்துள்ளார். முன்னைய தவறுகளைத் திருத்தி, புதிய உத்வேகத்துடன் போர்க்களத்தில் முன்னேற வேண்டியது அவசியம் என உக்ரைன் தரப்பு நம்புகிறது.




