நான் மனநிறைவுடனும் புன்னகையுடனும் விடைபெறுகிறேன்

1 Min Read

நான் மனநிறைவுடனும் புன்னகையுடனும் விடைபெறுகிறேன் என்று பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகும் சேர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று இறுதி உரையாற்றும் போது தெரிவித்தார்.

அத்தோடு நாம் சாதித்த அனைத்தையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் தொழிற்கட்சி அடைந்த மோசமான தோல்விகள் மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சியின் எழுச்சி ஆகிய காரணங்களால், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஸ்டார்மருக்கு எதிராக அழுத்தங் கொடுத்தனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்த ஸ்டார்மர் தொழிலாளர் கட்சி தலைமை மற்றும் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறும் நிலைக்கு உள்ளானார். அதனடிப்படையில் கடந்த ஜுன் 22 ஆம் திகதி தமது இராஜிநாமாவை உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்தமை தெரிந்ததே.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சேர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று காலை மன்னர் சார்ள்ஸை சந்தித்து, தமது பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபு ஆகிய பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்தார். அதை​ மன்னர் ஏற்றுக்கொண்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான 10 டவுனிங் தெருவிற்கு வெளியில் தமது பதவி விலகலின் இறுதி உரையை நிகழ்த்திய சமயமே ஸ்டார்மர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பிரித்தானிய பிரதமராகப் பணியாற்றியதை என் வாழ்வின் பாக்கியமாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

இன்று பிரித்தானியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. பொதுச் சேவைக்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது. குடியேற்றம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. பாதுகாப்பு மிகவும் வலுவாக உள்ளது. பிரித்தானியாவின் சர்வதேச நற்பெயர் பெரிதும் மேம்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

                பி.பி.சி, சி.என்.என்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *