பசிலுக்கு மீண்டும் பிடியாணை; நாட்டுக்கு வந்தால் வெளிநாடு செல்லவும் அதிரடித் தடை!

1 Min Read

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (21) பிடிவிறாந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மாத்தறை எலியகந்த வீதியில் உள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் ஒன்றரை ஏக்கர் காணியை முறைகேடாக ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த வழக்கு பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கடந்த மே 22 ஆம் திகதி நடைபெற்ற விசாரணைக்கு சமூகமளிக்காத நிலையில், இன்றும் (21) நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருவதைக் கருத்திற்கொண்ட நீதவான், அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிட்டதோடு, அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, பசில் ராஜபக்ச இலங்கைக்குள் நுழைய முடியுமே தவிர, மீண்டும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பசில் ராஜபக்சவுடன் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி மற்றும் திஸ்ஸ கலப்பத்தி, முதித ஜயக்கொடி ஆகிய நால்வருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ச மற்றும் அயோமா கலப்பத்தி ஆகியோர் ஆஜராகாத நிலையில், அவர்களுக்காகப் பிணை நின்றவர்கள் மாத்திரம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

பிணையாளர்களை எச்சரித்த நீதவான், அடுத்த முறை பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால் பிணைத் தொகையை அரசுடைமையாக்குவது குறித்துத் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்து, அது குறித்து விளக்கம் அளிக்க ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய காணி கொள்வனவு தொடர்பான மேலதிக விசாரணை மற்றும் அறிக்கைகள் அடுத்த வழக்குத் தவணையான ஓகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *