‘டிட்வா’ அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மீள்குடியேற்றப்படும் வரை தற்காலிகமாக வாடகை வீடுகளில் தங்கியிருப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்த வாடகைக் கொடுப்பனவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னர் 6 மாத காலத்திற்காக வழங்கப்பட்ட இந்தக் கொடுப்பனவானது, தற்போது 9 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனர்த்தத்தினால் வீடுகளை இழந்து மீள்குடியேற்றத்திற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் உச்சபட்சமாக ரூ. 25,000 வரை வாடகை கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவினால் 2026.07.10 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள 08/2025 (iv) இலக்க வரவுசெலவுத் திட்டச் சுற்றறிக்கையில் இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானமானது அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் புதிய வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வரை இச்சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அரசின் இந்த உடனடி நடவடிக்கை, வீடிழந்து தவிக்கும் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




