துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம்: துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக சேர்ப்பு

2 Min Read

ஹவ்லொக் பகுதியில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில் T-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இன்று (10) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 1 நீதிமன்றத்தில், பதில் நீதவான் ரவி மத்துகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் முன்னதாக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும், அப்போது போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நான்காவது சந்தேகநபர் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

எனினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டாவது சந்தேகநபரிடம் பதிவு செய்யப்பட்ட மேலதிக வாக்குமூலங்களின் ஊடாக, நான்காவது சந்தேகநபரை மீண்டும் இவ்வழக்கில் இணைப்பதற்கான போதிய சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

முன்னதாக, துப்பாக்கியை அகற்றுவதுடன் நான்காவது சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், பின்னர் இரண்டாவது சந்தேகநபர் அதனை மறைத்து வைத்திருப்பதற்கு உதவியாக இருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஒருங்கிணைந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்தே, துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை தற்போது நிறைவு செய்துள்ளதாகவும், பிரதிவாதிக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது துமிந்த திசாநாயக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் கடந்த வருடம் ஜூலை 29ஆம் திகதி நீதவான் நீதிமன்றம் தனது கட்சிக்காரரை விடுவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த புதிய நடவடிக்கையை மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விடயங்களை ஆராய்ந்த பதில் நீதவான் ரவி மத்துகம, தலா ரூ. 500,000 பெறுமதியான இரு தனிநபர் பிணைகளில் துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க உத்தரவிட்டார்.

அத்துடன், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பிரகாரமான மேலதிக அறிக்கையிடலுக்காக இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *