நோர்வே கடலில் உள்ள தங்கள் விமானம் தாங்கி கப்பலை ரஷ்யாவின் இரண்டு ரோந்து விமானங்கள் மீண்டும் மீண்டும் நெருங்கி வந்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு நெருங்கி வந்த விமானங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து கண்காணிக்க நீருக்கடியில் ஒலிவாங்கிகளாகச் செயல்படக்கூடிய கருவிகளை அதிக எண்ணிக்கையில் வீசியது. அதனால் தங்கள் போர் விமானங்கள் மூலம் அக்கப்பல் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், விமானம் தாங்கி கப்பலான எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸை, ரஷ்யாவின் பியர்-எஃப் கடல்சார் ரோந்து விமானங்கள் தாழ்வான உயரத்தில் பறந்து தேவையற்ற நெருக்கத்தில் கடந்து சென்றது.
அந்த விமானங்களில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிந்து கண்காணிக்கும் கருவிகள் வீசப்பட்டன.
அதனால் ரஷ்ய விமானங்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும் வரை அதை இடைமறிப்பதற்காக, எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கப்பலில் இருந்து இரண்டு எப்-35 ரக போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.
வட அட்லாண்டிக் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரித்தானிய கேரியர் ஸ்டிரைக் குரூப் தற்போது நேட்டோவின் கட்டளையின் கீழ் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




