உக்ரைன் தலைநகர் கீயூவ் மீது ரஷ்யா நேற்று முன்தினமிரவு நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 46 பேர் காயமடைந்துள்ளனர் என்று உயர்மட்ட இராணுவ நிர்வாகி திமூர் தகாச்சென்கோ தெரிவித்துள்ளார்.
காயமடைந்திருப்பவர்களில் ஐவர் சிறுவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கீயூவ்வின் பரந்த பகுதியில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அவசரநிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பேரிடர் ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும் நகரின் சில பகுதிகளைத் தாக்கியபோது, இரவு முழுவதும் பாரிய தீப்பிழம்பாக ஒளிர்ந்தன.
இத்தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் சிக்குண்டிருந்தனர். நகர வீதிகளில் கார்கள் எரிந்துகொண்டிருந்தன. நகரின் நான்கு மாவட்டங்களில் அழிவும் சேதமும் ஏற்பட்டுள்ளதாக கீயூவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ கூறினார்.
இத்தாக்குதல்களின் விளைவாக 20 இற்கும் மேற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இரண்டு மாவட்டங்களில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டடங்கள் தாக்கப்பட்டுள்ளன என்றும் தகாச்சென்கோ டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.




