ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் பாகிஸ்தானின் வர்த்தகப் பற்றாக்குறை 22 சதவீதமாக அதிகரித்து 39.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது என பாகிஸ்தான் புள்ளிவிபரவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்நிதியாண்டில் பாகிஸ்தானின் இறக்குமதி 8 சதவீதமாக அதிகரித்துள்ள அதேநேரம் ஏற்றுமதி 6 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அப்பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச்சூழல் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானின் பொருளாதாரம் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி, இயந்திரங்கள் மற்றும் கைத்தொழில்துறை மூலப்பொருட்களைப் பெரிதும் சார்ந்திருப்பதும், ஏற்றுமதிகள் புடவை போன்ற குறைந்த பெறுமதி சேர் பொருட்களில் குவிந்திருப்பதும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு அதிகம் பங்களித்துள்ளன என்று குளோபல் கெபிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் முஹம்மது வகாஸ் கனி கூறியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் ஆளுநர் ஜமீல் அகமது, ஏற்றுமதியை அதிகரிப்பதின் ஊடாகவே வர்த்தகப் பற்றாக்குறை உயர்வுக்கு தீர்வு காண முடியும். அதனால் ஏற்றுமதியை அதிகரிக்க, அரசாங்கம் புதிய வரவு செலவுத்திட்டத்தில் பல சலுகைகளை அறிவித்துள்ளது என்றுள்ளார்.




