யெமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பலொன்று தாக்குதலுக்கு இலக்கானதாக பிரித்தானிய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை பிரித்தானிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மத்திய நிலையம் பதிவு செய்துள்ளது.
இனம் தெரியாத ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகளால் கப்பல் தாக்கப்பட்டதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இதேவேளை யெமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஹுதைதா துறைமுக நகரின் தெற்கே நடத்திய தாக்குதலில் 14 படையினரைக் கொன்றதாக, அந்நாட்டின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்துடன் இணைந்த ஒரு இராணுவ அதிகாரி நேற்று தெரிவித்தார்.
ஹுதைதாவுக்கு தெற்கே உள்ள ஹேஸ் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பல மணி நேரம் மோதல்கள் நீடித்த போதிலும் அதனை அரசாங்க ஆதரவுப் படைகள் முறியடித்ததாகவும் அந்த அதிகாரி ஏ.எப்.பி யிடம் கூறியுள்ளார்.
அரப் நியூஸ்




