ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு நாட்கள் விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவுக்கு இன்று பயணமாகிறார்.
இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான ஆறு நாட்கள் இராஜதந்திர விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று ஜகர்த்தாவை சென்றடையும் இந்தியப் பிரதமர், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார் என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் ருத்ரேந்திர டாண்டன் தெரிவித்தார்.
இச்சமயம் இரு தரப்பு மூலோபாயக் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளன என்றும் குறிப்பிட்ட அவர், இந்தோனேசிய கலாசார மற்றும் வரலாற்று நகரமான யோக்யகார்த்தாவுக்கும் குறிப்பாக பிரம்பனன் கோயிலுக்கும் பிரதமர் செல்வார் என்றும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் அவர் இராஜந்திர விஜயத்தை மேற்கொள்வார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
த இந்து, ரொய்ட்டர்ஸ்




