மெர்சிடிஸ் அணியின் வெற்றிப் பின்னணியில் உழைத்த பிரித்தானிய இலங்கைத் தமிழர்

1 Min Read

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் அவுஸ்ரேலிய கிராண்ட் பிரீ போட்டியில் மெர்சிடிஸ் அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, உலகளவில் விளையாட்டு இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளார் அருண் ராஜ்குமார் என்ற பிரித்தானிய இலங்கைத் தமிழ் பொறியியலாளர்.

மெர்சிடிஸ் அணியின் இந்த மகத்தான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, வெற்றியாளர்களுக்கான மேடையில் ஏறி, மெர்சிடிஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்களுக்கான உத்தியோகபூர்வக் கிண்ணத்தை ஶ்ரீ ஏந்தும் அரிய வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் குடும்பப் பின்னணியைக் கொண்ட அருண் ராஜ்குமார், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஹை பெர்ஃபார்மன்ஸ் பவர்டிரெய்ன்ஸ் (Mercedes AMG High Performance Powertrains) நிறுவனத்தின் தடம்காண் மின் உற்பத்தி பொறியியலாளராக பணியாற்றி வருகிறார்.

பந்தய வார இறுதி நாட்களில், மெர்சிடிஸ் காரின் மின் உற்பத்தி நிலையங்களின் (Power Units) வேகம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்துவது இவரது முக்கிய பணியாகும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஃபார்முலா 1 கட்டமைப்பின் திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு மிக முக்கிய தூணாக இவர் விளங்குகிறார்.

F1 பந்தயங்களில் தனிப்பட்ட ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் விருதுகளைத் தாண்டி, கார்களை வடிவமைத்து உருவாக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியியலாளர்களின் கூட்டு உழைப்பிற்கு இந்த ‘தயாரிப்பாளர் கிண்ணம்’ வழங்கப்படுகிறது.

அருண் ராஜ்குமார் பிரித்தானியாவின் புகழ்பெற்ற பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் (University of Birmingham) பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். தனது படிப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு பயிற்சி மாணவராகவே (Placement Student) முதன்முதலில் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

அங்கிருந்து அவரது கடின உழைப்பு மற்றும் திறமையின் காரணமாக அணியின் முக்கிய பொறியியலாளராக அவர் உயர்ந்துள்ளமை, ஃபார்முலா 1 வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் நிபுணர்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *